சேலம் மாவட்டம் அறிமுகம்

   சேலம் மாவட்டம் சோழநாட்டின் ஒரு பகுதியாக பண்டைய நாட்களில் இருந்து வந்துள்ளது. சோழ மன்னர்கள் காலத்தில் இது ராசாச்சரிய சதுர்வேதி மங்களம் என அழைக்கப்பட்டுள்ளது. பதின்மூன்றாம் நூற்றாண்டில் இப்பகுதி தனி ஒரு ஆட்சிப்பரப்பாக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி படைக்கும் திப்பு சூல்தானுக்கும் இடையே 1972-இல் நடைபெற்ற போரை தொடர்ந்து ஒரு ஒப்பந்தம் ஏற்ப்பட்டது. இதன் அடிப்படையில் திப்பு சூல்தானிடம் இருந்து பெறப்பட்ட பகுதிகளைக்கொண்டு பாரமஹால் மற்றும் சேலம் மாவட்டம் என 1792-ல் உருவாக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளைக்கொண்டு பாரமஹால் (12 சமஸ்தானங்கள்) மற்றும் சேலம் மாவட்டத்தின் கிருஷ்ணகிரியை தலைநகரமாக கொண்ட பாரமஹால் மாவட்டம் எனவும், சேலத்தை தலைநகராகக் கொண்டு தால்காட் மாவட்டம் என்றும் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. சேலம் மாவட்டத்திற்கு முதல் ஆட்சித்தலைவராக 1790-ல்கிண்டேர்ச்லே பதவி வகுத்தார். பின்பு 1801-ல் இவை இரண்டும் மீண்டும் ஒன்றிணைக்கப்பட்டது. மாவட்ட தலைநகர் தர்மபுரியில் இருந்து சேலத்திற்கு 1830-ல் மாற்றப்பட்டது. தொடர்ந்து சில ஆண்டுகள் தலைநகர் ஓசூருக்கு மாற்றப்பட்டலும் கூட 1860-ல் ஆட்சித்தலைவர் அலுவலகம் மீண்டும் சேலத்திற்கு மாற்றப்பட்டது.

தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டமாக சேலம் 1965 வரை இருந்தது.

• 1947-ல் சேலம் மாவட்டம் சுதந்திர இந்தியாவின் ஒரு பகுதியானது.
• 1961-ல் திருசெங்கோடு வட்டத்தில் இருந்து சங்ககிரி வட்டம் பிரிந்து உதயமானது.
• 1965-ல் 2 அக்டோபர் 1965-ல் சேலம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டது. சேலம், ஆத்தூர், ஏற்காடு, ஓமலூர், சங்ககிரி, திருச்செங்கோடு, ராசிபுரம் (ம) நாமக்கல் ஆகிய எட்டு வட்டங்கள் சேலம் மாவட்டத்திலும், தர்மபுரி, கிருஷ்ணகிரி, அரூர், ஓசூர் ஆகிய நான்கு வட்டங்கள் தர்மபுரி மாவட்டத்திலும் சேர்க்கப்பட்டது.
• 1966-ல் ஓசூர் தாலுக்காவில் இருந்து பிரிந்து மேட்டூர் தாலுக்கா உதயமானது.
• 1989-ல் நாமக்கல் வட்டத்தில் இருந்து பிரிந்து பரமத்தி வேலூர் வட்டம் உதயமானது.
• 1997-ல் ஆத்தூர் வட்டத்தில் இருந்து பிரிந்தூ கெங்கவல்லி வட்டமும், சங்ககிரி வட்டத்தில் இருந்து பிரிந்து எடப்பாடி வட்டமும் உருவானது.
• 1997-ல் 1.2.1997 சேலம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு நாமக்கல் மாவட்டம் புதிதாக உருவாகப்பட்டது.
• 1998-ல் ஆத்தூர் (ம) கெங்கவல்லி வட்டங்களை உள்ளடக்கிய ஆத்தூர் வருவாய் கோட்டம் உருவாகப்பட்டது. சேலம் வட்டத்தில் எஸ்டேட் மேனேஜரின் கட்டுப்பாட்டில் இருந்த கிராமங்களை உள்ளடக்கி புதிதாக வாழப்பாடி வட்டம் உருவாக்கப்பட்டது.
• 2013-ல் சேலம் வட்டம் மூன்று வட்டங்களாக பிரிக்கப்பட்டு, சேலம், சேலம்(மேற்கு), சேலம்(தெற்கு) என மூன்று வட்டங்களாக உதயமானது.
• 2015-ல் ஆத்தூர் வட்டத்திலிருந்து பிரிந்து பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் உதயமானது.
• 2016-ல் ஓமலூர் வட்டத்திலிருந்து பிரிந்து காடையாம்பட்டி வட்டம் உதயமானது.

இயற்கை வளம்
   சேலம் மாவட்டம் பெரும்பகுதி, செம்மண் (ம) கரிசல் மண் வகையினை கொண்டது. இங்கு காவிரியும், வெள்ளாறும், வசிஷ்ட நதியும் ஓடுகிறது. இம்மாவட்டம் குறிஞ்சி திணையைச் சார்ந்தது. இம்மாவட்டத்தில் ஏற்காடு, சேர்வராயன், கல்வராயன், கஞ்சமலை முதலியன முக்கியமான மலைகளாகும்.

கனிவளம்
   கஞ்சமலை, தீர்த்தமலை முதலிய மலைகளில் இரும்புத்தாது நிறைந்துள்ளது. இம்மளைகளில் சுமார் 45 கோடி டன் எடையுள்ள இரும்புத்தாது உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. சேர்வராயன் மலைப்பகுதியில் அலுமினியம் தயாரிப்பதற்கு தேவையான பாக்சைட் என்ற தாது அதிக அளவில் நிறைந்துள்ளது. இம்மாவட்டத்தில் கிடைக்கும் மாக்னசைட் என்ற தாது இந்தியாவிலேயே முதல்தரம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மாவட்ட மக்கள்
   சேலம் மாவட்டத்தில் வசிக்கும் மக்களில் பெருமளவு வன்னியர்களும், வேளாளகவுண்டர்களும் வாழ்கின்றனர். தாரமங்கலம், ஆட்டையாம்பட்டி, வெண்ணந்தூர், சேலம் கிழக்கு பகுதி ஆகிய இடங்களில் நெசவு செய்யும் செங்குந்த முதலியார்கள் வாழ்கின்றனர். ஏத்தாப்பூர், புத்திர கவுண்டம்பாளையம், பெத்தநாயக்கன் பாளையம் ஆகிய பகுதிகளில் தெலுங்கு நாயக்கர்களும், சேலத்தின் தென்பகுதியில் கன்னடசாதியினரும் வாழ்கின்றனர். மாவட்டத்தின் ஆதி குடிகளான மக்கள் சேர்வராயன் மலைத்தொடரில் வாழ்ந்து வருகின்றனர்.

வேளாண்மை
   சேலம் மாவட்டத்தில் நெல், கரும்பு, வாழை, பருத்தி, சோளம், மாம்பழம் ஆகியவை ஆண்டு முழுவதும் பயிரிடப்படுகின்றது. இதனை தவிர காபி, பாக்கு, நிலக்கடலை, வெற்றிலை, மரவள்ளிகிழங்கு, பழவகைகள், பணப்பயிர்களாக பயிரிடப்படுகின்றது. வசிஷ்ட நதியின் குறுக்காக கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளில் இருந்து வெட்டப்பட்டுள்ள கால்வாய்களின் மூலமாக சுமார் 6000 ஏக்கர் நிலங்கள் நீர்ப்பாசன வசதி பெறுகின்றன. மேட்டூர் அணை கால்வாய் மூலமாக மேட்டுர், எடப்பாடி, சங்ககிரி வட்டங்கள் பயனடைகின்றன. மேலும் பொதுப்பணித்துறை மற்றும் பஞ்சாயத்து யூனியன் ஏரிகள் 258 உள்ளன. இந்த ஏரிகளில் 23500 ஏக்கர் நிலங்கள் நீர்ப்பாசன வசதி பெறுகின்றன.

தொழில்வளம்
   சேலம் மாவட்டத்தில் சேலம் (உடையாப்பட்டி), ஆத்தூர் (செல்லியம்பளையம்) பகுதிகளில் பெரிய அளவிலான நூர்ப்பலைகள் உள்ளன. சேலம் சங்ககிரி துர்க்கத்தில் இந்திய சிமெண்ட் தொழிற்சாலை (சங்கர் சிமெண்ட்) அமையப்பெற்றுள்ளது. மேட்டூரில் ரசாயன பொருள் தொழிற்சாலை (கெம்பிளாஸ்ட்), அலுமினிய தொழிற்சாலை, முலாம் பூசும் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. சேலம் மாவட்டம் மிக சிறப்பு வாய்ந்த சேலம் இரும்பாலை, டால்மியா மேக்னசைட் நிறுவனம், பர்ன் ஸ்டேண்டு கம்பெனி ஆகியவை ஒருங்கே அமைய பெற்றதாகும்.
முக்கிய இடங்கள்

1. சுகவனேசுவரர் கோவில்
   இக்கோவில் இலக்கிய சான்றுகளை கொண்டு பார்க்கும் போது கி.பி.7 – 8-ம் நுற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

2. மேட்டூர்
   மேட்டூர் அணை காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள ஒரு அணையாகும். இது சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் என்னும் ஊரில் கட்டப்பட்டுள்ளதால் அவ்வாறு அழைக்கப்படுகிறது. இது அணையைக்கட்டிய ஸ்டேன்லி என்பவரின் பெயரால் ஸ்டேன்லி நீர்த்தேக்கம் என்றும் அழைக்கப்படுகிறது.இந்த அணை 1934-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது மற்றும் கட்டிமுடிக்க 9 ஆண்டுகள் ஆனது. இது தமிழகத்தின் மிகப்பெரிய அணையாகும்.

   மேட்டூர் நீர்த்தேக்கம் கட்டி முடிக்கப்பட்ட போது, இது தான் ஆசியாவிலேயே மிக உயரமானதும் உலகிலேயே மிகப்பெரியதுமான ஏரியாக விளங்கியது. அணையின் அதிகபட்ச உயரம் மற்றும் அகலம் முறையே 214 மற்றும் 171 அடி ஆகும். அதிகபட்ச சேமிப்பு உயரம் 120 அடி ஆகும். மேட்டூர் அணைக்கு கர்நாடகாவில் உள்ள கபினி அணை மற்றும் கிருஷ்ணா ராஜா சேகர அணை ஆகியவற்றிலிருந்து நீர் பெறப்படுகிறது. மேட்டூர் அணையில் 2 நீர் மின் நிலையங்கள் உள்ளன, முதல் பிரிட்டிஷ் ஆட்சியின் போதும் இரண்டாவது இந்தியக் குடியரசிலும் கட்டப்பட்டது.

3. ஏற்காடு
   ஏற்காடு என்பது தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள கோடை வாழிட நகராகும். இது கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள சேர்வராயன் மலையில் அமைந்துள்ளது. ஏற்காடு கடல் மட்டத்திலிருந்து 5326 அடி (1623மீட்டர்) உயரத்தில் உள்ளது. இதை ஏழைகளின் ஊட்டி என்றும் அழைப்பார்கள். ஏரிக் காடு என்பதே ஏற்காடு என்று மருவி விட்டது. இது சேலத்திலிருந்து 36 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் 20 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன.

   19ம் நூற்றாண்டில் சேலத்தில் தங்கியிருந்த ஆங்கிலேயர்கள் ஏற்காட்டைக் கண்டறிந்தார்கள். சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் காக் பர்ன் இங்கு காப்பிச்செடி, ஆப்பிள் போன்ற பழ வகைகளை அறிமுகப்படுத்தினார். ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காடு நடுத்தர வர்க்க மக்களுக்கு ஒரு சொர்க்கமாகும். மரங்களின் நிழலும் தென்றலின் சுகமும் வெயிலின் தாக்கத்தையும் மறைத்துவிடும் சூழல் கொண்ட ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

   சுமார் 383 சதுர கிலோ மீட்டர் கொண்ட ஏற்காட்டில் இயற்கை எழில் மிகுந்த குன்றும் அதையொட்டி அமைந்துள்ள ஏரியும் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் வகையில் உள்ளது. மேலும் இங்கு சிறுவர்கள் விளையாடி மகிழ பூங்காக்களும் இடம் பெற்றுள்ளன. இங்குள்ள கிள்ளியூர் அருவியில் குளித்து மகிழலாம். ஏற்காடு ஏரி நிரம்பினால் இந்த அருவியில் தண்ணீர் கொட்டும். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 5342 அடி உயரத்தில் உள்ள மலைக் கோவில் மிகவும் பழமையான, புகழ் பெற்ற கோயிலாகும். இங்குள்ள பக்கோடா முனை எனுமிடத்திலிருந்து பார்த்தால் கீழுள்ள பகுதி மிக அழகுடன் காட்சியளிக்கிறது.

   மிகக் குறைந்த செலவில் பயணம் மேற்கொண்டு நிறைந்த மகிழ்ச்சியைப் பெறலாம் என்பது சுற்றுலா பயணிகளின் எண்ணம்.

சேலம் மாவட்ட ஆட்சியர்கள்
மத்திய செயற்குழு உறுப்பினர்கள்
மாவட்ட நிர்வாகிகள் விவரம்
வட்டகிளை நிர்வாகிகள் விவரம்
வருவாய் நிர்வாக அலகுகள்
நமது சங்கமும் நாமும்
சங்கமும் அதன் வளர்ச்சியும்
பயிலரங்கம்
சந்தா வரவு-செலவுகள்
மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்
மாவட்ட பொதுக்குழு கூட்டம்
மத்திய செயற்குழு கூட்டம்
சங்க குரல் பத்திரிக்கை
மாநில மையத்திற்க்கான நிதி
வட்டக்கிளை செயல்பாடுகள்
வெஞ்சிறை ஏகிய வீரர்கள்