உங்களோடு சில வார்த்தைகள்
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே
வணக்கம். 6.10.1964 ல் துவக்கப்பட்ட நமது வருவாய்த்துறை அலுவலர் சங்கம் கடந்த 40 ஆண்டு காலமாக தொடர்ந்து சங்க உறுப்பினர்களின் நலனில் அக்கரை கொண்டு செயலாற்றி வருவதை தாங்கள் அறிவீர்கள். உறுப்பினர் நலன் காப்பது என்பது உறுப்பினர்களின் பணி பாதுகாப்பு, பணியிடம் ஏற்படுத்தி கொடுப்பது. பணி உயர்வுக்கு வழிவகை செய்வது. ஊதியமாற்றம், இன்னபிற பணபலன்களுக்குரிய சலுகைகளைப் பெற்று தருவது மட்டும் சங்கத்தின் நோக்கமல்ல. கருவறை முதல் கல்லறை வரை பொது மக்களின் அன்றாட பிரச்சனைகள் மற்றும் அவர்களது தேவைகளை நிறைவு செய்யும் வகையில் சேவை ஆற்றி வரும் நமது வருவாய்த்துறை சகோதரர்களின் பணி என்பது வெறும் ஒரு தொழிலாக இல்லாமல் சமூகப்பார்வையுடன் கூடிய சமுதாயப்பணியாக இருக்க வேண்டுமென்பதிலும் சங்கம் அக்கறை கொண்டுள்ளது.
நாளுக்கு நாள் மாறி வரும் சட்டம் மற்றும் விதி திருத்தங்களினால் வருவாய்த்துரையில் உள்ள பல்வேறு அடிப்படையான விவரங்கள் பல்வேறு நிலைகளில் பணியாற்றும் நமது சகோதரர்கள் அறிந்து கொண்டு அவர்களது பணித்திறனை மேம்படுத்திட வேண்டியது அவசியமாகிறது. இதனை ஓரளவுக்கேனும் சரி செய்திடும் நோக்கில் அலுவலக உதவியாளர்கள் முதல் வட்டாட்சியர்கள் வரை அன்றாடம் தாங்கள் செய்து வரும் பணிகளை அட்டவணைப்படுத்தி அண்மைக்கால சட்டவிதி திருத்தங்களுடன் ஒரு கையோடு தயார் செய்திடவும் இது குறித்து பயிற்சி வகுப்புகள் நடத்தி நமது உறுப்பினர்களின் பணித்திறனை மேம்படுத்திட வேண்டுமென நமது மாவட்ட சங்கத்தில் முடிவெடுத்துள்ளது. அதனடிப்படையில் வருவாய் நிலை ஆணை, சட்ட தொகுப்பு நூல்கள் அண்மைக்கால அரசாணைகள் ஆகியவற்றில் இருந்து வருவாய் நிர்வாகம், நில நிர்வாகம், சமூக நல உதவித்திட்டங்கள் போன்றவை குறித்து பல்வேறு தலைப்புகளின் கீழ் சில விவரங்களைத்தொகுத்து அளித்துள்ளோம். வருவாய்த்துறையைச் சார்ந்த அனைத்துப் பொருட்கள் குறித்தும் இதில் கொண்டு வர இயலவில்லை. மேலோட்டமான விவரங்களே இதில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இக்கையேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களை அடிப்படையாகக் கொண்டு சட்ட நூல்களின் துணைக்கொண்டு முழுமையாக விவரங்களைத் தெரிந்து கொண்டு செயலாற்றிட கேட்டுக்கொள்கிறோம். நமது சங்க உறுப்பினர்கள் அனைவரும் தங்களால் முடிந்த வரை வருவாய்த்துறை தொடர்புடைய பல்வேறு சட்டவிதிகளை தெரிந்து கொண்டு செயல்படுத்துவதன் மூலம் நிர்வாகத்தினை செம்மைப்படுத்துவதோடு நம்மை நாடிவரும் பொதுமக்களுக்கு தாமதமின்றி உதவிடும் வகையில், நமது செயல்பாடுகள் அமைந்திட இச்சிறு கையோடும், நமது சங்கத்தின் மூலம் அளிக்கப்படும் பயிற்சி வகுப்பும் ஓரளவு பயன்தரும் என நாங்கள் நம்புகிறோம் இம்முயற்சிகளின் வெற்றி என்பது செயல்படுத்தவிருக்கின்ற உங்களது கையில்தான் உள்ளது. இக்கையேட்டில் ஏதேனும் தவறுகள் கண்டறியப்பட்டாலோ, முக்கியமான விவரங்கள் ஏதேனும் தெரிவிக்க விடுபட்டிருந்தாலோ திருத்தங்கள் மேற்கொள்ள ஏதுவாக சங்கத்திற்கு தெரிவித்திடக்கேட்டுக்கொள்கிறோம்.
|